Ticker

6/recent/ticker-posts

Advertisement- Leader Board

இலங்கை பொலிசாருக்கான விசேட இந்தி மொழி கற்கைநெறி ஆரம்பம்

 


2022 ஜனவரி 10 ஆம் திகதியன்று உலக இந்தி தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கான இந்தி புலமை கற்கைநெறி ஒன்றை இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் அல்விஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பொலிஸ்மா அதிபர் சி,டி.விக்ரமரட்னே அவர்கள் கௌரவ விருந்தினராகவும்   பங்கேற்ற நிலையில் பதில் இந்திய உயர் ஸ்தானிகர் திரு வினோத் கே ஜேக்கப் அவர்களும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் இலங்கை பொலிஸ் சேவையைச் சேர்ந்த 70 சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

2.         பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் Dr.S.ஜெய்சங்கர் ஆகியோரின் விசேடசெய்திகள் பதில் உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் அவர்களால் இந்நிகழ்வில் வாசிக்கப்பட்டன. வெளியுறவு மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் உயர் ஸ்தானிகர் ஶ்ரீ கோபால் பாக்லே ஆகியோரின் செய்திகள் வீடியோ மூலம் சபையோருக்கு காண்பிக்கப்பட்டன.

3.         உலக இந்தி தின வாழ்த்துக்களை தனது செய்தியில் பகிர்ந்துகொண்ட பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகரித்துவரும் இந்தி மொழி பயன்பாடு மற்றும் அதன் பிரபலத்தன்மை குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை, உலக இந்தி தினத்தை முன்னிட்டு இந்திய தூதரகங்களால் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் பாராட்டுக்களைத்தெரிவித்து நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.  வெளியுறவு மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி அவர்கள் தனது செய்தியில், சமாதானத்தினதும் பரிவினதும் மொழியான இந்தி மொழியானது இந்தியாவையும் வேறு நாடுகளையும் அவற்றின் மக்களையும் இணைப்பதில் மிகவும் முக்கியமான பங்களிப்பினை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் அல்விஸ்,  பொலிஸ்மா அதிபர் சி,டி.விக்ரமரட்னே மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தனது விசேட வீடியோ செய்தியில் உயர் ஸ்தானிகர் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். உத்தியோகபூர்வ தேவைகள் மற்றும் தனிப்பட்ட ஆர்வத்திற்காக இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதில இலங்கை பொலிசார் ஆர்வம் காட்டுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

4.         இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே. ஜேக்கப் அவர்கள், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார மற்றும் மொழியியல் உறவுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை என்று குறிப்பிட்டதுடன், சமகாலத்தில் இந்தி மொழியானது  இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பிரபலமான  நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி கற்கைநெறிகளைத்தொடர இலங்கை மாணவர்களுக்காக வருடாந்தம் இந்திய அரசாங்கத்தால் ஏராளமான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை முழுவதும் இந்தி மொழியை ஊக்குவிப்பதில் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம்  முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில்   10 பல்கலைக்கழகங்களிலும்   80 அரச பாடசாலைகளிலும் இந்தி மொழி  கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க, இலங்கையில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தை பரப்புவதில் ஆற்றிய பங்களிப்பை கௌரவித்து இந்திய ஜனாதிபதியால் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருது மறைவின்பின் வழங்கி கௌரவித்ததை அவர் இங்கு நினைவு கூர்ந்தார். இது இலங்கையுடனான கலாசார உறவுகளுக்கு இந்திய அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. அத்துடன் இந்தியா-இலங்கையிடையிலானதும் இரு நாடுகளின் மக்களிடையிலானதுமான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது.  

5.         உலக இந்தி தினத்தில் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்காக இந்தி கற்கை நெறி ஒன்றை ஆரம்பித்தமை தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் அல்விஸ் அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் காலாகாலமாக இலங்கை பொலிசாருக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கி வரும் உதவிகளுக்காக அவர் நன்றி தெரிவித்திருந்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவும் இந்த விசேட இந்தி மொழி கற்கை நெறியானது ஆதரவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

6.         இந்நிகழ்வில் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் இந்தி மாணவர்கள் கலாசார நிகழ்வுகளை வழங்கியதுடன் பிரபலமான இந்தி  மற்றும் சிங்கள மொழிப்பாடல்களை பாடியிருந்தார்கள். இந்த அங்குரார்ப்பண நிகழ்வுகளை அடுத்து இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இந்தி கற்கை நெறிக்கான முதலாவது விரிவுரையும் நடத்தப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

10 ஜனவரி 2022

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

0 Comments